செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க நவீன கருவி அமைப்பு

Published On 2020-10-07 10:34 IST   |   Update On 2020-10-07 10:34:00 IST
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க நவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலைநகர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 15 நவீன தொலை கண்காணிப்பு கருவி அமைக்கப்பட்டுள்ளது.

இக்கருவி மூலம் நோயாளிகளின் இதயத் துடிப்பு அலை, இதயத்துடிப்பு விகிதம், சுவாச விகிதம், ஆக்சிஜன் செறிவு மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்காணிக்கலாம்.

இந்த நவீன தொலை கண்காணிப்பு கருவி, கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்டுள்ள கணினி திரையுடன் இணைக்கப்பட்டிருக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாரே, மருத்துவக்குழுவினர் இக்கருவி மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்லாமல், இக்கருவி மூலம் நோயாளிகளின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினருக்கு உதவியாக இருக்கும்.

இத்தகைய நவீன தொழில்நுட்ப கருவியின் பயன்பாட்டால், நோயாளிகளுக்கு தொந்தரவின்றி சிகிச்சையளிப்பதுடன், மருத்துவ குழுவினரும் நோய் தொற்றுக்கு ஆளாகாமல், அவர்களது உடல்நலனும் காக்கப்படும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News