செய்திகள்
துரைமுருகன்

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் துரைமுருகன், எ.வ.வேலு உள்பட 1064 பேர் மீது வழக்கு

Published On 2020-10-03 11:52 IST   |   Update On 2020-10-03 11:52:00 IST
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் தடையை மீறி நடத்திய கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ.வேலு உள்பட 1064 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலூர்:

கொரோனா பரவல் தடுக்கும் வகையில் நேற்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.

ஆனால் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி காட்பாடியில் தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன், குடியாத்தத்தில் வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி, அணைக்கட்டில் நந்தகுமார் எம்.எல்.ஏ உட்பட தி.மு.கவினர் கிராமசபை கூட்டம் நடத்தினர்.

இதையடுத்து வேலூர் மாவட்டத்தில் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தியது, கொரோனா அபாய நிலையை அறிந்தும் மக்களை கூட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் துரைமுருகன் உள்பட மொத்தம் 200-க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த நாச்சானந்தல் பஞ்சாயத்தில் தி.மு.க. சார்பில் நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.யுமான எ.வ.வேலு கலந்து கொண்டார்.

இதேபோல் சோமாசிபாடியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான பிச்சாண்டி, கலசபாக்கத்தில் நடந்த கூட்டத்தில் அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதவிர மேலும் 20 இடங்களில் தி.மு.க. சார்பில் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக எம்.எல்.ஏக்கள் எ.வ.வேலு, பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி. மற்றும் 20 பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட தி.மு.க.வினர் 864 பேர் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News