செய்திகள்
வெட்டாறு வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர் மண்டியிருப்பதை படத்தில் காணலாம்.

வெட்டாறு வடிகால் வாய்க்காலை தூர்வார கோரிக்கை

Published On 2020-09-27 07:01 GMT   |   Update On 2020-09-27 07:01 GMT
மழைக்காலத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை தவிர்க்க வெட்டாறு வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதி டெல்டா பாசன பகுதியாக உள்ளது. இதில் வாழைக்குறிச்சி, அடிக்காமலை, பாலசுந்தரபுரம், மேலகுடிகாடு, தென்கச்சிபெருமாள்நத்தம், கீழகுடிகாடு, இடங்கண்ணி, அண்ணங்காரம்பேட்டை ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வாழைக்குறிச்சி கிராமத்தில் தொடங்கி அண்ணங்காரம்பேட்டை கிராமம் வரை உள்ள அனைத்து வயல்களுக்கும் வெட்டாறு வாய்க்கால் பிரதான வடிகால் வாய்க்காலாக உள்ளது.

வாழைக்குறிச்சி 1-ம் எண் பாசன வாய்க்கால் அருகில் இருந்து தொடங்கும் இந்த வடிகால் வாய்க்கால் அண்ணங்காரம்பேட்டை பகுதியில் பூவோடையில் கலக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வடிகால் வாய்க்கால் தூர் வராப்படாததால் வாய்க்கால் முழுவதும் புதர்கள் மண்டி வாய்க்கால் இருக்குமிடம் தெரியாமல் காணப்படுகிறது. தற்போது சரியான நேரத்தில் சம்பா பருவ விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

தற்போது நல்ல நிலையில் விளைந்து வரும் நெற்பயிர்கள் பருவ மழைக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. மழைக்காலம் தொடங்கி விட்டால் குறைந்தது ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வெள்ள நீர் வடிவதற்கு வழி இல்லாமல் போகலாம் என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே வெட்டாறு வடிகால் வாய்க்கால் உடனடியாக தூர்வாரப்பட்டால் மழைநீர் வயல்களில் வெள்ளக்காடாக தேங்காமல் உடனடியாக வடிந்து சம்பா பருவ விவசாயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதைப்போலவே 1-ம் எண் பாசன வாய்க்காலில் அடிக்காமலை பகுதியில் இருந்து பிரிந்து வரும் சந்தன வாய்க்கால் என்கிற இதே பகுதிக்கான பாசன வாய்க்கால் நன்கு அகலமான நீளமான வாய்க்காலாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது வாய்க்காலை ஒட்டிய பகுதியில் விவசாயிகள் சிறிது சிறிதாக வாய்க்காலை ஆக்கிரமித்ததால் வாய்க்கால் ஒற்றையடிப்பாதை போல் குறுகி காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெட்டாறு வடிகால் வாய்க்கால் மற்றும் சந்தன வாய்க்கால் ஆகியவற்றை உடனடியாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதி விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News