செய்திகள்
வங்கி கணக்கு

பிரதமரின் கிசான் திட்டத்தில் 580 போலி கணக்குகள் முடக்கம்- ரூ. 11 லட்சம் பறிமுதல்

Published On 2020-09-10 06:26 GMT   |   Update On 2020-09-10 06:39 GMT
ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் நடந்த ஆய்வில் 580 பேர் விவசாயிகள் என்ற பெயரில் போலியாக சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் காலாண்டுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம், ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்திற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் துறை, வருவாய்த்துறை மூலம் தகுதியானவர்கள் கணக்கெடுக்கப்பட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு வந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்திருந்தனர். இதனை வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்ததில் 85 ஆயிரம் விவசாயிகள் இணைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களை சேர்த்து மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த ஆய்வில் 580 பேர் விவசாயிகள் என்ற பெயரில் போலியாக சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து போலி விவசாயிகளின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கியதோடு ரூ.11 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்களின் விண்ணப்பம், பயனாளிகள் விபரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 580 கணக்குகள் போலியாக தொடங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு அந்த வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மோசடி தொடர்பாக வங்கி கணக்கில் இருந்து 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் குறைந்த அளவில் தான் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் வரும் விண்ணப்பங்களை வருவாய் துறை, வேளாண் துறை அதிகாரிகளால் முழு மையாக ஆய்வுக்கு உட்படுத்தி பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

இத்திட்டத்தின் கடைசி காலகட்டத்தில் தான் வெளி இடங்களில் உள்ள கணினி மையங்கள் மூலம் போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது கண்டறியப்பட்டுள்ள 580 நபர்கள் இந்த திட்டத்தில் சேர எவ்வித தகுதியும் இல்லாதவர்கள். அதாவது, ஈரோடு மாவட்டத்தில் நிலம் இருந்து அவர்கள் வெளியூரில் வசித்து வருவது அல்லது அரசுப் பணியில் இருப்பது போன்ற விதிமுறைகளுக்கு மாறாக இணைந்தவர்களாக உள்ளனர். இதனால் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மோசடி தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 7,000 விண்ணப்பங்களில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனென்றால் இந்த 7,000 விண்ணப்பங்கள் தான் கணினி மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் அதாவது இணை இயக்குனரின் பாஸ்வேர்டு கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News