செய்திகள்
ஈஷாவில் சுதந்திர தின கொண்டாட்டம்

ஈஷாவில் சுதந்திர தின கொண்டாட்டம்- இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் கொடியேற்றினார்

Published On 2020-08-15 12:27 GMT   |   Update On 2020-08-15 12:27 GMT
சுதந்திர தினத்தையொட்டி கோவை ஈஷா யோகா மையத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


கோவை ஈஷா யோகா மையத்தில் 74-வது சுதந்திர தின விழா இன்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  

இவ்விழா ஈஷாவின் பிரதான நுழைவாயிலான மலைவாசலில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு களப்பணியில் முதல்நிலையில் சேவையாற்றும் மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா மற்றும் செம்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் அபிநயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். டாக்டர் நிர்மலா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார். 



அவர் பேசுகையில், “74-வது சுதந்திர தின விழாவை முற்றிலும் வித்தியாசமான ஒரு சூழ்நிலையில் கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு கொரோனா என்ற பெரும் பரவல் நோயை எதிர்கொண்டு வருகிறோம். அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடித்தால் கொரோனாவை உலகத்தில் இருந்து விரட்டி விடலாம்.  

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இதுவரை 3,750 பேருக்கு சிகிச்சை அளித்து உள்ளோம். இப்போது சிகிச்சை பெறும் நோயாளிகளை முந்தைய நோயாளிகளை விட வித்தியாசமாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த கொதிப்பு பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி மற்றும் கேன்சர் பிரச்சினை இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என்றார். 

முன்னதாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களின் சுதந்திர தின வாழ்த்து செய்தி ஒலிப்பரப்பப்பட்டது. 

இவ்விழாவில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.சதானந்தம், வார்டு உறுப்பினர் திரு.எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மேலும், அருகில் இருக்கும் கிராம மக்கள் தூய்மைப் பணியாளர்கள், ஈஷா தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News