செய்திகள்
பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

பாலை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2020-08-01 07:43 GMT   |   Update On 2020-08-01 07:43 GMT
குடியாத்தம் அருகே உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:

குடியாத்தம்- சித்தூர் சாலையில் உள்ள பாக்கம், ராமாலை, தாட்டிமானபல்லி, கல்லப்பாடி, கே.மோட்டூர், ஸ்ரீராமுலு பட்டி, கதிர் குளம், அனுப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயம் மற்றும் கறவை மாடுகளை நம்பியே உள்ளனர். இந்த கறவை மாடுகளில் கறக்கப்படும் பாலை ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி வந்தனர்.

தற்போது கொரோனா பாதிப்பு தடை உத்தரவு உள்ளதால் அந்த தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை விலையை குறைத்து உள்ளனர். மேலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொள்முதல் செய்ய மறுக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் கறக்கும் பால் முழுவதையும் சப்ளை செய்ய முடியவில்லை. பால் வேண்டாம் என கூறுவதால் அந்த பாலை என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்களின் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனங்களை அந்த தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து வாங்குகின்றனர். ஆனால் அதற்கான விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

விலை கட்டுபடி ஆகாத இந்த நிலையிலும், பால் விலை குறைந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு உடனடியாக இதில் தனிக்கவனம் செலுத்தி விவசாயிகளின் முழு பாலை கொள்முதல் செய்யவும் உரிய விலை கிடைக்கவும் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனங்களை குறைந்த விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கே.மோட்டூர் ஸ்ரீராமுலு பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News