செய்திகள்
விமான விபத்து ஏற்பட்டதாக வெளியான புகைப்படம்

புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்து தீப்பிடித்ததாக பரபரப்பு

Published On 2020-06-13 07:22 IST   |   Update On 2020-06-13 07:22:00 IST
புதுக்கோட்டை அருகே விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவுடையார்கோவில்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே செங்காமை ஊராட்சி மேல வசந்தனூர் கிராமத்தில் உள்ள கண்மாய் ஏரியில் நேற்று விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்பில் படத்துடன் தகவல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், திருப்புனவாசல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு அப்பகுதி பொதுமக்களும் திரண்டனர்.

அப்போது அங்கு கருவேல மரங்கள், முட்புதர்கள் எரிந்து கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் விமானம் பறந்து போனதாகவும், அது தான் வெடித்து விழுந்து தீப்பிடித்திருக்கலாம் என்றும் கூறினர்.

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவர் இது பற்றி கூறுகையில், “விமானம் விபத்துக்குள்ளானதாக பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது. இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ” என்றார்.

இதற்கிடையே ஏரியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை போன்று சமூக வலைத்தளத்தில் வெளியான புகைப்படம் கலிபோர்னியாவில் நடந்த சம்பவம் என தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்துடன், வாட்ஸ்-அப்பில் ஒரு ஆடியோவில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள ஏரியை குறிப்பிட்டு பதிவிட்டு சிலர்பரப்பி உள்ளனர். புரளி ஏற்படுத்தியவர்கள் மீது புதுக்கோட்டை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க தயராகி வருகின்றனர்.

Similar News