செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்ட முதியவரை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் வழி அனுப்பி வைத்த காட்சி.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் 4 நாட்களில் குணமடைந்தார்

Published On 2020-05-28 01:25 GMT   |   Update On 2020-05-28 01:25 GMT
காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் 4 நாட்களில் குணமடைந்தார். அவரை டாக்டர்கள், செவிலியர்கள் உற்சாகமாக வீட்டுக்கு வழியனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு சிகிச்சை பிரிவில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட 16-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.

கூடுவாஞ்சேரியை சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய பரிசோதனை செய்தபோது, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள், செவிலியர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த அவர் வெறும் 4 நாட்களில் குணம் அடைந்து வீடு திரும்பினார். அவரை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் தங்கராஜ், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரம், தேசிய சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி மற்றும் செவிலியர்கள் கைகளை உற்சாகமாக தட்டி வழியனுப்பி வைத்தனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட முதியவர் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா வைரஸ் என்பது மற்ற வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தாலும், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் விரைவில் குணமடைந்து விடலாம். எனவே பொதுமக்கள் கொரோனா குறித்து அச்சப்படவேண்டாம். கொரோனாவில் இருந்து நான் மீண்டு வந்ததே அதற்கு உதாரணம் என்றார்.
Tags:    

Similar News