செய்திகள்
கோப்பு படம்

ஊரடங்கு உத்தரவை மீறி தோட்டத்தில் இறைச்சி சமைத்து சாப்பிட்ட 11 பேர் கைது

Published On 2020-04-27 05:18 GMT   |   Update On 2020-04-27 05:18 GMT
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தோட்டத்தில் இறைச்சி சமைத்து சாப்பிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் அவர்கள் போலீசில் சிக்கி உள்ளனர்.
சேலம்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கொட்டாய்தெருவை சேர்ந்த வாலிபர்கள் சிலர், அதே பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது தோட்டத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் அனைவரும் இறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். மறுநாளும் அதே வாலிபர்கள் தோட்டத்துக்கு சென்று மீன் வறுவல் செய்து சாப்பிட்டுள்ளனர்.

இதனை அவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக படம் பிடித்து வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஒன்றாக கூடி இறைச்சி சமைத்து சாப்பிட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வீராணம் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஊரடங்கு உத்தரவை மீறி தோட்டத்தில் இறைச்சி சமைத்து சாப்பிட்டது, கொட்டாய் தெரு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 27), ரகுபதி (24), சக்திவேல் (21), ராஜேஷ் (25) உள்பட 11 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக அந்த வாலிபர்கள் போலீஸ் நிலையம் முன்பு சமூக இடைவெளியுடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா வைரசின் தாக்கம் குறித்தும், அதன் பரவும் விதம் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News