செய்திகள்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும், அதன் மேல் பகுதியில் வாலிபர்கள் இருந்ததையும் படத்தில் காணலாம்.

புதுக்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த 4 வாலிபர்கள் அலறி அடித்து ஓட்டம்

Published On 2020-04-23 05:55 GMT   |   Update On 2020-04-23 05:55 GMT
புதுக்கோட்டையில் ஊரடங்கை ஹெலி கேமரா மூலம் போலீசார் கண்காணித்த போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த 4 வாலிபர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வீடியோவில் சுவாரசியமான காட்சிகள் பதிவானது.
புதுக்கோட்டை:

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை தவிர வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஹெலி கேமரா மூலம் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கணேஷ்நகர் பகுதியில் ஹெலி கேமரா சென்ற போது ஆங்காங்கே கூடியிருந்தவர்கள் அதனை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

இதேபோல அப்பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நோக்கி ஹெலி கேமரா சென்றது. அப்போது அதன் மேல் பகுதியில் 4 வாலிபர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹெலி கேமரா அவர்களை நோக்கி போலீசார் இயக்கினர். இதனை கண்டதும், நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதியில் இருந்த 4 பேரும் அலறி அடித்து ஓடி வேக, வேகமாக படிக்கட்டில் இறங்கி ஓட்டம் பிடித்தனர். ஹெலி கேமராவும் அவர்களை பின்னால் விரட்டி சென்றது. அவர்கள் அருகில் உள்ள ஒரு மைதானத்திற்கு சென்றனர். அங்கு சிறுவர்கள், வாலிபர்கள் பலர் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். ஹெலி கேமராவை கண்டதும் அவர்களும் தலைதெறிக்க ஓடினர். மைதான சுற்றுச் சுவரை ஏறி குதித்து தப்பியோடினர்.

மேலும் வீடுகளுக்கு வெளியே தெருக்களில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களும் தெறித்து ஓடினர். ஹெலி கேமரா வீடியோவில் பல சுவாரசிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் விழிப்புணர்வு வீடியோவாக நேற்று வெளியிட்டுள்ளனர். அதன் பின்னணியில் சூரியன் படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பூக்குழி இறங்க செல்லும் காட்சியில் இசைக்கப்படும் இசையும், ஒரு மனுஷன் வீடு வந்து சேருவதற்குள் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு... தினமும் காலையில... காலையில... 5 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டியிருக்கு... ஊருக்குள்ள மொத்தமே 4 தெருவு தானே இருக்கு... என நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை வசனங்களும் இடம் பெற்றுள்ளது. சமூக இடைவேளி மற்றும் ஊரடங்கை கடைபிடிக்க அறிவுறுத்தும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
Tags:    

Similar News