செய்திகள்
கோப்பு படம்

டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர்

Published On 2020-04-22 08:28 IST   |   Update On 2020-04-22 08:28:00 IST
சென்னையில் கொரோனாவால் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.
சென்னை:

நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டது மனித நேயம் இல்லாத சம்பவம். அது கண்டிக்கத்தக்கது.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை, மாநகராட்சி மற்றும் வருவாய்துறையினர் அடக்கம் செய்து வருகிறார்கள். இதுபோல் இறந்தவர்களின் உடல் மூலம் கொரோனா நோய் தொற்று ஏற்படாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறி விட்டனர்.

அதற்கு பிறகும் இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News