செய்திகள்
பஸ்சில் இருந்து முத்தம்மாள் ரோட்டில் விழும் காட்சிகள் (கண்காணிப்பு கேமராவில் பதிவானது), முத்தம்மாள்

ஓடும் பஸ்சில் படிக்கட்டு வழியாக தவறி விழுந்து பெண் பலி

Published On 2020-03-11 07:29 IST   |   Update On 2020-03-11 07:29:00 IST
ஓடும் பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக ஒரு பெண் தவறி விழுந்து பலியானார். அவர் தவறி விழும் காட்சி வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது.
ஈரோடு :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகரை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி முத்தம்மாள். இவர் சம்பவத்தன்று மதியம் பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு தனியார் பஸ்சில் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்து கொண்டு இருந்தார். அந்த பஸ் பவானிசாகர் டவுன்ஷிப் நிறுத்தம் அருகே சென்றபோது படிக்கட்டில் இருந்து முத்தம்மாள் திடீரென தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே பஸ்சும் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும், அக்கம் பக்கத்தினரும் முத்தம்மாளை மீட்டு ஆம்புலன்சில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

மருத்துவமனையில் டாக்டர்கள் முத்தம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் முத்தம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் முத்தம்மாள் பஸ் படிக்கட்டில் இருந்து ரோட்டில் தவறி விழும் காட்சி, அவர் பயணம் செய்த பஸ்சில் பொருத்தப்பட்டு இருக்கும் கண் காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது.

Similar News