செய்திகள்
ஈஸ்வரன்

ரஜினி கட்சியில் சேர காத்திருக்கும் அமைச்சர்கள்- ஈஸ்வரன் தகவல்

Published On 2020-02-17 05:09 GMT   |   Update On 2020-02-17 05:09 GMT
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அமைச்சர்கள் சென்று விடுவார்கள் என்றும் அதற்காக அவர்கள் காத்து இருப்பதாகவும் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
பெருந்துறை:

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுக்குழு கூட்டம் பெருந்துறையில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.

பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் பொருளாதார பிரச்சனை, விவசாயம், கொங்கு மண்டலத்தில் அழிந்து வரும் தொழில்களையும் காப்பாற்ற எந்த விதமான அறிவிப்பும் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் மறந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என நினைத்து குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் நினைத்தது போல் தற்போது இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் சில மாதங்களாக நடைபெற்ற போட்டி தேர்வுகள் எதுவும் முறையாக நடைபெறவில்லை என்பது தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு நடந்ததில் தெரிய வருகிறது. படித்த ஏழை- எளிய மாணவர்களுக்கு படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது.

ஈரோடு மாவட்டத்தை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் அமைச்சர்கள் இதை கிண்டலடித்து பேசி வருகிறார்கள்.

ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் கருத்து கூறி வருகிறார்கள். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் ரஜினியுடன் சென்று விடுவார்கள். ரஜினியின் கட்சி தொடக்கத்துக்காக அமைச்சர்கள் காத்து இருக்கிறார்கள்.

இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
Tags:    

Similar News