செய்திகள்
மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்

துப்பாக்கி, கத்தியுடன் மோதல் - வீடியோவில் பதிவான காட்சி மூலம் மாணவர்களை பிடிக்க வேட்டை

Published On 2020-02-05 14:13 IST   |   Update On 2020-02-05 14:13:00 IST
பொத்தேரி அருகே பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி, கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு மருத்துவம், என்ஜினீயரிங், கலை-அறிவியல், சட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கியும், சுற்றுப்புற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கேண்டீன் அருகே எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு மாணவர்கள் இரு பிரிவுகளாக மோதிக் கொண்டனர்.

அவர்கள் பட்டாக்கத்தி, துப்பாக்கி ஆகியவற்றை காட்டி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

துப்பாக்கியுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதை அங்கிருந்த சக மாணவர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும் இந்த வீடியோ வாட்ஸ்-அப்பிலும் வேகமாக பரவியது.

இதனை பார்த்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் மறைமலைநகர் போலீசார் மோதல் நடந்த பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் விசாரணையில் இறங்கியதை கண்டதும் பல்கலைகழகத்தில் இருந்த மாணவர்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர். நள்ளிரவு வரை போலீசார் அங்கிருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அடையாள அட்டை உள்ளவர்களை மட்டும் பல்கலைக்கழக விடுதிக்குள் தங்க அனுமதித்தனர். போலீசாரின் நடவடிக்கையால் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு திரும்பி வரவில்லை.

அவர்கள் பற்றிய விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் வீடியோவில் பதிவான காட்சியை வைத்து அதில் உள்ள மாணவர்களை பிடிக்க வேட்டை நடந்து வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவிலும் மாணவர்களின் மோதல் காட்சி பதிவாகி இருக்கிறது. அதனை வைத்தும் விசாரித்து வருகிறார்கள்.

இந்த மோதல் குறித்து எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு மாணவர்கள் லலித்பிரசாத், விஷ்ணு, ராகேஷ், ரஷித், மவுலான் அலி ஆகியோர் மறைமலைநகர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் புகாரில் தெரிவித்த மாணவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க இன்று காலையில் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இங்கு படிக்கும் வட மாநில மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த மோதல் காரணமாகவே மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து தாக்கி கொண்டு உள்ளனர். அவர்களுக்கு பட்டாக்கத்தி, துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை. குற்றவாளிகள் யாரேனும் மாணவர்களுடன் சேர்ந்து மோதலில் ஈடுபட்டனரா என்றும் விசாரணை நடக்கிறது.

இந்த மோதலில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News