டேங்க் ஆபரேட்டர் கொலை- டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கி பொதுமக்கள் மறியல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 43). அதே பகுதியில் டேங்கர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நதியா. 2 மகன்கள் உள்ளனர்.
ரமேஷ் குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று இரவு 9 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் இன்று காலை நாட்றம்பள்ளி செல்லும் சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் ரமேஷ் குமார் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இரவு மர்ம நபர்கள் அவரை தலையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதனை கண்டு திடுக்கிட்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டு அங்கிருந்த டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கினர். மேலும் நாட்றம்பள்ளி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி தங்கவேலு மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் இந்த பகுதியில் ஏற்கனவே 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கூடுதலாக டாஸ்மாக் கடைகள் உள்ளதால் திருட்டு வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பெண்கள் பள்ளி மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது டாஸ்மாக் கடையால் கொலை நடந்துள்ளது.
இதேநிலை நீடித்தால் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படும். எனவே இந்த கடையை மூடும் வரை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர்.
அப்போது போலீசார் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீசார் ரமேஷ்குமார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.