செய்திகள்
திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டு மாரடைப்பால் மரணம்
திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
திருப்போரூர்:
மாமல்லபுரத்தை அடுத்த பையனூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56). திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்ததும், போலீஸ் நிலையத்தின் மேல் பகுதியில் உள்ள ஓய்வு அறைக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மூர்த்தி அங்கேயே பரிதாபமாக இறந்தார். அந்த நேரத்தில் மற்ற போலீசார் அங்கு செல்லாததால் ஏட்டு மூர்த்தி இறந்தது உடனடியாக தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஓய்வு அறைக்கு மற்ற போலீசார் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மூர்த்தி இறந்து கிடப்பது தெரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மூர்த்தியின் உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.