செய்திகள்
அமைச்சர் கருப்பணன்

முதல்-அமைச்சர் ஆகும் யோகம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை- அமைச்சர் கருப்பணன் பேச்சு

Published On 2020-01-26 14:29 GMT   |   Update On 2020-01-26 14:29 GMT
முதலமைச்சர் ஆகும் கனவில் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆனால் அவருக்கு அந்த யோகம் இல்லை என்று அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம் அம்மாபேட்டையில் உள்ள அந்தியூர் ரோட்டில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமை தாங்கினார். முன்னாள் எம்பியும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான என்.ஆர்.கோவிந்தராஜர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார்.

எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுக நூறாண்டு கால கட்சி. அ.தி.மு.கவில் யார் வேண்டுமானாலும் முதல் அமைச்சர் ஆகலாம், அமைச்சர் ஆகலாம்,சேர்மன் ஆகலாம், பஞ்சாயத்து தலைவர் ஆகலாம் நான் அமைச்சர் ஆவேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் நான் இன்று அமைச்சராக உள்ளேன்.

தி.மு.க.வில் அப்படியில்லை அது குடும்ப கட்சி முதலில் கருணாநிதி, அடுத்து ஸ்டாலின், உதயநிதி, பிறகுஅவரது மகன் இப்படி அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள், அதே போல் ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஒன்றியங்களிலும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள்தான் கட்சி பொறுப்பிலோ அல்லது மற்ற அரசு பொறுப்பிலோ இருப்பார்கள். முதலமைச்சர் ஆகும் கனவில் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஆனால் அவருக்கு அந்த யோகம் இல்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது

தமிழகத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகஅரசு செய்து வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்து 39 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்தனர்.

ஆனால் 39 பைசாவிற்கு கூட பிரயோஜனம் இல்லை. அதை தொடர்ந்து நடைபெற்ற விக்கிரவண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மக்கள் புரிந்து கொண்டனர் அதனால் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் அதிமுக கைபற்றியது.இங்குள்ள ஒருசில எம்எல்ஏக்களால் 100 சதவீதம் பெற வேண்டிய வெற்றி பறி போனது.

கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் நல்லா இருக்க முடியாது. சில அதிமுக வினாரால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்ப்பட்டு வருகிறது.

மக்களுக்கு தெரியும் யார் கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் என்று?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News