செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

பெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்கலாம் - அன்புமணி ராமதாஸ்

Published On 2020-01-25 18:39 IST   |   Update On 2020-01-25 18:39:00 IST
நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளது எனவும் பெரியார் பற்றி பேசியதை ரஜினி தவிர்த்திருக்காலம் எனவும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வாலாஜா:

வாலாஜாவில் பா.ம.க. சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி கலந்து கொண்டு இளைஞர்கள், மகளிர்கள், பொதுமக்கள் இடையே கலந்துரையாடினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமத்தில் பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை பா.ம.க. கண்டிக்கிறது.

5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுதேர்வு தேவையற்றது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்று விதிகள் இருந்தது.

ஒருசில நபர்களால் கொள்கை முடிவை மாற்றியமைத்துள்ளனர்.கிராமபுறங்களில் 5-ம் வகுப்பு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் போகும் மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு பெற்றோர்களுடைய வேலையை பார்ப்பார்கள்.

இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாகும் சூழல் வரும். உடனடியாக தமிழக அரசு இதனை திரும்பப் பெற வேண்டும். இதனால் கல்வி தரம் உயரும் என்றால் நிச்சயமாக கிடையாது. இதனால் கடுமையான பின்னடைவுதான் வரும்.

இதனை கடுமையாக பாமக எதிர்க்கும் வரும் 28-ந்தேதி சென்னையில் 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளது.

ஒரு விவசாயி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை சொல்கிறார் காவிரி டெல்டா பகுதியில் அந்த மண் உணவு அளித்திருக்கிறது. அதனை பாதுகாப்பு கொண்டு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மைக்கு தொடர்ந்து பா.ம.க. குரல் கொடுத்து வருகிறது. ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடுக்கு குடிநீர் விவசாயத்திற்கு போதுமான நீரை பூர்த்தி செய்ய வேண்டும்.

பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் சமூக நீதி நமக்கு கிடைத்திருக்காது. சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பலவகை போராட்டங்களை நடத்தி வந்தவர்.

இந்த சம்பவங்கள் நடந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ரஜினி பெரியார் பற்றி பேசியதை தவிர்த்து இருக்கலாம். தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது.

எனவே இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து 50 ஆண்டுக்கு முன்பு நடந்த வி‌ஷயத்தை இன்றைய சூழலுக்காக விவாதம் செய்வது தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News