மும்பை-சென்னை எக்ஸ்பிரசில் ரெயில் பயணிகளிடம் பணம் வசூலித்த போலி டிக்கெட் பரிசோதகர் கைது
அரக்கோணம்:
சேலம் கெங்கவல்லி கிராமத்தை சேர்ந்தவர் அல்ஜியானி (வயது 31). இவர் ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர் போல நடித்து பயணிகளிடம் பணம் வசூல் செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் திருத்தணி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு பயணிகளிடம் அல்ஜியானி டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பயணிகள் டிக்கெட் வைத்திருந்தாலும் ரெயில்வே விதிகளை மீறியதாக கூறி இல்லாத விதிகளை கூறியும் பணம் கேட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த பயணிகள் அவரை மடக்கி பிடித்தனர். திருத்தணியில் இருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அல்ஜியானியை பிடித்து விசாரித்தனர். அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என்று தெரியவந்தது.
அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருத்தணிக்கு சென்று அல்ஜியானியை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். எந்தெந்த ஊர்களில் டிக்கெட் பரிசோதகராக நடித்து பணம் பறித்தார். போலி டிக்கெட் ரசீது மற்றும் அடையாள அட்டை வைத்திருக்கிறாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.