செய்திகள்
மாணவி நிவேதினி

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

Published On 2020-01-24 10:20 IST   |   Update On 2020-01-24 10:20:00 IST
காட்பாடி அருகே பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

காட்பாடி அடுத்த லத்தேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மகள் நிவேதினி (வயது 14). லத்தேரி குடியாத்தம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை மீட்டு கே.வி.குப்பம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.

பள்ளி வகுப்பறையில் மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மாணவர்கள் ஆசிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நலக்குறைவால் மாணவி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே மாணவி எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவரும்.

இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News