செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களை மீண்டும் பயன்படுத்த ஆலோசனை- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-01-14 04:29 GMT   |   Update On 2020-01-14 04:29 GMT
மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்ப பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி:

கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையத்தில் புதிய விளையாட்டு மைதானம், அம்மா இளைஞர் விளையாட்டு திட்ட துவக்க விழா நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கைப்பந்து விளையாடி துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கமாக உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னையில் 7 மாதத்தில் நேரு ஸ்டேடியத்தை கட்டி சாதனை படைத்தார். அவரது வழியில் இந்த அரசு விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளிலும், 528 பேரூராட்சிகளிலும் இத்திட்டம் இன்று எல்லா மாவட்டங்களிலும் துவக்கப்பட உள்ளது. இது இந்த அரசின் தொலை நோக்கு சிந்தனையை காட்டுகிறது. கபடி விளையாட்டு படிப்படியாக மாறி கிரிக்கெட்டாக மாறி விட்டது.

ஈரோடு-கோபி வரை 4 வழிச்சாலை விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. கோபி ஆர்ச்-ஆர்ச் செல்வதற்கு போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. இதற்காக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆட்சியில் கோப்புகள் தேங்குவதில்லை. உடனடியாக பணிகள் நடைபெறுகின்றன. சுற்றுச்சூழல் துறை மூலமாக குள்ளம்பாளையம் ஏரியில் படகு சவாரி துவக்கப்பட உள்ளது. கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் உடை மாற்றுவதற்கு கூடுதல் அறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும்.

5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சாதி சான்று சமர்ப்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் அரசு பிறப்பிக்கவில்லை. மாணவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை திரும்ப பெற்று அதனை பாதுகாப்பாக வைத்து மீண்டும் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து வருகிறோம்.

ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள சேவை மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News