செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் உமாமகேஸ்வரி முன்பு அதிகாரியை ஒருமையில் பேசிய எம்எல்ஏ., அதிமுக நிர்வாகி.

அரசு அதிகாரியை ஒருமையில் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-நிர்வாகி

Published On 2020-01-06 05:03 GMT   |   Update On 2020-01-06 05:03 GMT
புதுக்கோட்டையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் மற்றும் கலெக்டர் முன்பு அரசு அதிகாரியை அதிமுக எம்எல்ஏ, நிர்வாகி ஆகியோர் ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை காமராஜபுரத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ., நார்த்தாமலை ப.ஆறுமுகம், அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் உள்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சருடன் மேடையில் இருந்த ஆறுமுகம் எம்.எல்.ஏ., திடீரென தனக்கு அருகில் நின்ற மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலியிடம் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.விடம் பணம் வாங்கி கொண்டு கொண்டு வெற்றியை அறிவித்து விட்டதாக ஒருமையில் பேசியதுடன், அக்பர் அலியிடம் மேடையை விட்டு இறங்கும்படி கூறினார்.

எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கரும், பணத்தை வாங்கி கொண்டு தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்து விட் டாய், உன்னால் அரசுக்கு கெட்டப்பெயர் என்று பேசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்பர் அலி விழா மேடையை விட்டு கீழே இறங்கி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரித்த போது உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க. நிர்வாகி மாவட்ட வழங்கல் அதிகாரியை ஒருமையில் பேசியது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட வார்டில் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முத்துசுப்பிரமணியன் என்பவரும், தி.மு.க. சார்பில் செல்வம் என்பவரும் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கையில் முத்து சுப்பிரமணியத்தை விட செல்வம் 1,780 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கூடாது என்று கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ., ஆறுமுகம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் வெற்றி பெற்ற வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட வழங்கல் அலுவலரான அக்பர் அலி, தி.மு.க. வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார். இதில் ஏற்பட்ட விரக்தியில்தான் அரசு விழாவில் எம்.எல்.ஏ., ஆறுமுகம் உள்ளிட்டோர் அதிகாரியை வசை பாடியதாக கூறப்படுகிறது.

அமைச்சர், மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகியை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
Tags:    

Similar News