செய்திகள்
புஷ்பம் (மூச்சு குழாய்க்குள் சிக்கிய திருகாணி)

பெண்ணின் மூச்சு குழாய்க்குள் சிக்கிய தங்க மூக்குத்தி திருகாணி

Published On 2020-01-04 09:56 IST   |   Update On 2020-01-04 09:56:00 IST
பெண்ணின் மூச்சு குழாய்க்குள் சிக்கிய தங்க மூக்குத்தி திருகாணியை அறுவை சிகிச்சை இல்லாமல் அரசு டாக்டர்கள் அகற்றினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பட்டம்மாள் விடுதியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி புஷ்பம் (வயது 55). இவர் கடந்த ஒரு மாதமாக வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டு இருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும், இருமல் நிற்கவில்லை. இதனிடையே இருமல் வரும்போது, சளியுடன் ரத்தம் வந்தது. இதனையடுத்து அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு வலது நுரையீரலின் நடுப்பகுதிக்கு செல்லும் மூச்சுக் குழாயில் ஒரு சிறிய ஆணி போன்ற பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் பரிசோதித்ததில், அது தங்க மூக்குத்தியில் உள்ள திருகாணி என்பதும், நுரையீரல் சுருங்கி இருப்பது தெரியவந்தது. அந்த தங்க திருகாணியை எடுப்பதற்காக மூச்சுக்குழாயில் அகநோக்கி (லேப்ராஸ் கோப்பி) செலுத்தி டாக்டர்கள் ஆராய்ந்தனர். அப்போது திருகாணியின் தலைப்பகுதி கீழேயும், நுனிப்பகுதி மேலேயும் இருப்பதை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து லேப்ராஸ் கோப்பி மூலம் ஒரு சிறிய இடுக்கி போன்ற கருவி செலுத்தப்பட்டு அந்த திருகாணியின் நுனிப்பகுதியை பிடித்து வெளியே எடுக்கப்பட்டது. தற்போது, புஷ்பம் நலமாக உள்ளார். இந்த சிகிச்சையினை மருத்துவ கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் செய்தனர்.

Similar News