செய்திகள்
அத்திவரதர்

அத்திவரதர் தரிசனத்தால் காஞ்சிபுரம் சுற்றுலா தலத்தில் முதல் இடம்

Published On 2019-12-25 13:11 IST   |   Update On 2019-12-25 13:11:00 IST
காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் தற்போது காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 16-ந் தேதி வரை நடைபெற்றது.

அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



48 நாட்கள் நடைபெற்ற விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் சயன கோலத்திலும், மீதி நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார். அத்திவரதர் சிலைக்கு தினமும் வண்ண வண்ண பட்டாடைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். விழா நடைபெற்ற ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 3.59 கோடி பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்கு வந்து உள்ளனர்.

ஆகஸ்டு 16-ந் தேதி தரிசனம் முடிந்ததும் அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தபடி உள்ளது.

அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் அவர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.

இதன் காரணமாக வழக்கத்தை விட காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் தற்போது காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.

இதற்கு அத்திவரதர் தரிசனமே காரணம் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு வரை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 5.82 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு 4.19 கோடி பேர் வருகை தந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருகருகே இருக்கும் சென்னையும், காஞ்சிபுரமும் தமிழகத்துக்கு வந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதத்தை ஈர்த்துள்ளதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அத்திவரதர் தரிசனம் மவுசால் சுற்றுலா இடத்தில் காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது, சென்னை 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 2.75 கோடி சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் கோவில் தலைமை பட்டர் கிட்டு கூறும்போது, ‘அத்திவரதர் தரிசனத்துக்கு பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவர்கள் தரிசனம் நடந்த மண்டபம் மற்றும் அத்திவரதர் வீற்றிருக்கும் குளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள். தரிசனம் நடந்த வசந்த மண்டபத்தில் அத்திவரதர் உருவ படத்தை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

8 அடி உயரம், 4 அடி அகலத்தில் அத்திவரதர் உருவப்படம் வைக்கப்படுகிறது. ஜனவரி முதல் பக்தர்கள் இதனை தரிசிக்கலாம்’ என்றார்.

Similar News