செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட லாரி

அனுமதியின்றி லாரியில் ஏற்றி வரப்பட்ட 21 டன் வெங்காயம் பறிமுதல்

Published On 2019-12-23 22:42 IST   |   Update On 2019-12-23 22:42:00 IST
சீர்காழி அருகே அனுமதியின்றி லாரியில் ஏற்றி வரப்பட்ட 21 டன் வெங்காயத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:

வெங்காயம் விலை திடீரென உயர்ந்து இருப்பதால் மதிப்பு மிக்க பொருட்களில் ஒன்றாக வெங்காயம் மாறி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதைபோல வெங்காயத்தையும் கொடுப்பதற்கு முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

வருகிற 27 மற்றும் 30-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதை தடுப்பதற்காக நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையில் உள்ள அதிகாரிகள் நாகை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் லாரியில் 21 டன் பெரிய வெங்காயம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் லாரி டிரைவரிடம் இல்லை. இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இருந்து 21 டன் வெங்காயத்தை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சீர்காழி போலீசார் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட வெங்காயம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக வெங்காயம் கொண்டு வரப்பட்டதா? அல்லது விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதா? என்பது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News