செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு பட்டம் அளிக்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டபோது எடுத்தபடம்.

57,407 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் புரோகித்

Published On 2019-11-30 11:01 GMT   |   Update On 2019-11-30 11:01 GMT
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 57,408 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தின் 83-வது பட்டமளிப்பு விழா இன்று காலை பல்கலைகழக சாஸ்திரி அரங்கில் நடந்தது.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னரும், பல்கலைகழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து செந்தூர் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நேற்று இரவு சிதம்பரம் வந்தார்.

அவரை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், பல்கலைகழக துணை வேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் கார் மூலம் சென்று அண்ணாமலை பல்கலைகழக கெஸ்ட் ஹவுசில் இரவு தங்கினார்.

இன்று காலை பல்கலை கழக பட்டமளிப்பு விழா அரங்குக்கு கவர்னர் வந்தார். 57,407 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதோடு 37 பேருக்கு தங்கப்பதக்கம், 96 பேருக்கு பல்வேறு அறக்கட்டளை பரிசுகளையும் வழங்கி பேசினார். பல்கலைகழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி. அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் சத்ய நாராயணமூர்த்தி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் கிருஷ்ணமோகன், தொலைதூரக்கல்வி மைய இயக்குனர் அருள் மற்றும் பலர் பங்கேற்றனர். விழா முடிந்ததும் கவர்னர் கார் மூலம் நாகப்பட்டினம் புறப்பட்டு சென்றார்.

கவர்னர் வருகையையொட்டி சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News