செய்திகள்
கடலூர் குண்டு உப்பலவாடி விபிஆர் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

கடலூரில் தொடர் மழை- 500 வீடுகளை சூழ்ந்த மழைநீர்

Published On 2019-11-30 05:29 GMT   |   Update On 2019-11-30 05:29 GMT
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 500 வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 3 தினங்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், நடுவீரப்பட்டு , பாலூர், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், குண்டுஉப்பலவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவிலிருந்து விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

நள்ளிரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து இன்று காலையும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. காலை நேரத்தில் மழை பெய்ததால் அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தப்படியும் சாலையில் சென்றனர்.

கடலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நகர்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள 500 வீடுகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

ஒருசில பகுதிகளில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் கடந்த சில நாட்களாக தேங்கி நிற்கின்றன. அதில் கழிவு நீரும் கலப்பதால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது.

கடலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நள்ளிரவில் இருந்து விட்டு விட்டு மழைபெய்து வந்தது. காலையிலும் தொடர்ந்து பலத்த மழைபெய்ததனால் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதாக பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு செல்போனில் குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அந்த தகவல் சற்று காலதாமதமாக வந்ததால் ஒரு சில மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து பின்னர் விடுமுறை என்று தெரிந்தவுடன் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் வீட்டிற்கு திரும்பி சென்றனர். கடலூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கெடிலம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுபோல் திருவந்திபுரம் அணைகட்டு பகுதிகளிலும் அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, பெண்ணாடம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது.

விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணியிலிருந்து லேசான மழை பெய்தது.
Tags:    

Similar News