செய்திகள்
தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி

குடியாத்தம் அருகே தண்டவாளத்தில் மீண்டும் பாறாங்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி?

Published On 2019-11-26 11:34 IST   |   Update On 2019-11-26 11:34:00 IST
குடியாத்தம் அருகே தண்டவாளத்தில் மீண்டும் பாறாங்கல்லை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை:

திருவனந்தபுரத்திலிருந்து உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூருக்கு செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்றுவிட்டு காட்பாடி நோக்கி புறப்பட்டது.

ஆம்பூரை கடந்து குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்ததில் சிறிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த கற்கள் ரெயில் என்ஜினில் சிக்கி தூள் தூளாக நொறுங்கி சிதறியது. பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்த ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை அந்த இடத்திலேயே நிறுத்தினார்.

இந்த தண்டவாளத்தையொட்டி எதிர்திசையில் ரெயில்கள் செல்ல மற்றொரு தண்டவாளம் உள்ளது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அந்த தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்தது. அந்த தண்டவாளத்திலும் இதுபோன்று கற்கள் வைக்கப்பட்டிருந்தன. சரக்கு ரெயிலில் அந்த கற்களும் தூள்தூளாக நொறுங்கியது. இதனால் சரக்கு ரெயிலும் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து என்ஜின் டிரைவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 20 நிமிடம் கழித்து ரெயில்கள் அந்த இடத்திலிருந்த மெதுவாக புறப்பட்டு சென்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோன்று அந்த பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக குடியாத்தம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போல் தண்டவாளத்தில் பாறாங்கல் வைக்கப்பட்டுள்ளது. பாறாங்கற்களை வைத்து தப்பியவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News