செய்திகள்
புதைகுழியில் சிக்கி பலியான கண்டக்டர் ஜீவா

புவனகிரி அருகே ஆற்று புதைகுழியில் சிக்கி அரசு பஸ் கண்டக்டர் பலி

Published On 2019-11-24 15:07 IST   |   Update On 2019-11-24 16:38:00 IST
புதைக்குழியில் சிக்கிய 2 மகன்களை காப்பாற்றிய பஸ் கண்டக்டர் தண்ணீரில் முழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது நாலாந்தெத்து. இந்த ஊரை சேர்ந்தவர் ஜீவா (வயது 48). இவரது மனைவி ஜெயகாந்தி (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஜீவா சிதம்பரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இன்று காலை ஜீவா தனது மகன்கள் 2 பேரையும் அழைத்துகொண்டு அங்குள்ள வெள்ளாற்றுக்கு குளிக்க சென்றார்.

வெள்ளாற்றில் ஓடிய தண்ணீரில் ஜீவாவின் 2 மகன்களும் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த புதைகுழியில் 2 பேரும் சிக்கி கொண்டு கூச்சலிட்டனர். மகன்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு குளித்துகொண்டிருந்த ஜீவா ஓடி சென்றார். 2 மகன்களையும் புதைகுழியிலிருந்து மீட்டுவிட்டார்.

ஆனால் அவரால் புதைக்குழியிலிருந்து வெளியே வரமுடியாமல் தவித்தார்.

சிறிதுநேரத்தில் அவர் புதைகுழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கரையில் நின்ற 2 மகன்களும் தன் தந்தை தண்ணீரில் மூழ்கியதை அறிந்ததும் அவர்கள் ஊருக்குள் ஓடி சென்று அங்கு இருந்தவர்களிடம் நடந்த விபரத்தை கூறினர்.

இதை அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளாற்று பகுதிக்கு ஓடி வந்தனர்.

அங்கு புதைக்குழியில் சிக்கி இறந்த ஜீவாவின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News