செய்திகள்
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை சாந்தியின் கையை பிடித்து மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.

வேப்பூர் அருகே ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் மாணவ-மாணவிகள் கண்ணீர்

Published On 2019-11-21 04:46 GMT   |   Update On 2019-11-21 04:46 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதால் மாணவ- மாணவிகள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மா.புதூர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மா.புதூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் ஆசிரியை சாந்தி உள்பட 2 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆசிரியர் சாந்தி அனைத்து மாணவர்களிடம் அன்பு செலுத்தி வந்தார். இந்தநிலையில் ஆசிரியை சாந்தி திடீரென்று ராமநத்தம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று மதியம் பள்ளியில் ஆசிரியை சாந்திக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியை பாராட்டி பெற்றோர்கள் பேசினர்.

அப்போது மாணவ, மாணவிகள் ஆசிரியை சாந்தியை இடமாற்றம் செய்யக்கூடாது. இதே பள்ளியில் தொடர்ந்து அவர் பணியாற்ற வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பெற்றோர்களும் கண்ணீர் வடித்தனர். ஆசிரியை சாந்தி தொடர்ந்து இங்கு பணியாற்றி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கதறி அழுத மாணவ, மாணவிகளை ஆசிரியை சாந்தி சமாதானம் செய்தார். பின்னர் அவர் பள்ளியை விட்டு சென்றார்.
Tags:    

Similar News