செய்திகள்
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதி மின்னொளியில் ஜொலிக்கும் காட்சி.

மாமல்லபுரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் புராதன சின்னங்கள்

Published On 2019-10-21 08:30 IST   |   Update On 2019-10-21 08:30:00 IST
மாமல்லபுரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறைச்சிற்பங்கள் போன்றவை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவை யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களாகவும் விளங்குகின்றன.

சமீபத்தில் இங்கு நடந்த சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பால் மாமல்லபுரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. வரலாற்று சிறப்புமிக்க அந்த சந்திப்புக்காக இங்குள்ள புராதன சின்னங்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டன. மேலும் வண்ண விளக்கு அலங்காரத்தால் மெருகூட்டப்பட்டன. இதனால் இரவு நேரத்திலும் மாமல்லபுரம் சிற்பங்கள் மின்னொளியில் ஜொலித்தன.

ஆனால் பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு நடந்த ஒரு நாள் மட்டுமே கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களில் விளக்குகள் எரிய விடப்பட்டன. பின்னர் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் இரவு நேரத்தில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் மின்னொளி அலங்காரம் இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். மேலும் மாமல்லபுரத்தில் மின்னொளி அலங்காரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இதை ஏற்றுக்கொண்ட தொல்லியல் அதிகாரிகள், மாமல்லபுரத்தில் சில பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் தினந்தோறும் இரவு 9 மணி வரை விளக்கு வெளிச்சத்தில் பயணிகள் சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கணேசரதம், கிருஷ்ண மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய நினைவு சின்னங்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.

இதையறிந்து மாமல்லபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் ரூ.40 பார்வையாளர் கட்டணம் செலுத்தி விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை கண்டுகளித்தனர்.

மாமல்லபுரத்தில் இதுவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் இனிமேல் இரவு 9 மணி வரை விளக்கு வெளிச்சத்தின் பின்னணியில் சிற்பங்களின் அழகிய தோற்றத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம். இதனால் இரவு நேரத்திலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமல்லபுரம் புராதன சிற்பங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு தலா ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் 25 லட்சம் பேரும், வெளிநாட்டு பயணிகள் 1 லட்சம் பேரும் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டதாலும், இரு நாட்டு தலைவர்கள் வருகையால் முக்கியத்துவம் பெற்றுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இந்திய அளவில் முதலிடம் பிடிக்கும் என்றும் சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News