ரூ.1 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை - தாய், பாட்டி, பெண் புரோக்கர் கைது
வாணியம்பாடி:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சத்யா (வயது26). ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்த இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆதித்யா (வயது1) அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தேவையானவற்றை முருகன் வாங்கிக் கொடுத்தார்.
இருவரும் குழந்தையை அன்போடு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் முருகன் காசநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக தர்மபுரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
குழந்தையுடன் இருந்த சத்யா வருமானம் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது.
அப்போது சத்யாவின் பெரியம்மா கீதா (50) (குழந்தையின் பாட்டி) என்பவரை அதே பகுதியை சேர்ந்த புரோக்கர் கவிதா தொடர்பு கொண்டுள்ளார். பெங்களூரில் ஒருவர் ஆண் குழந்தை வளர்ப்பதற்கு கேட்கிறார். அவரிடம் குழந்தையை விற்றால் ரூ.1 லட்சம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
இதுபற்றி இருவரும் சத்யாவிடம் தெரிவித்தனர் அவரும் குழந்தையை விற்க முடிவு செய்தார். 3 பேரும் சேர்ந்து பெங்களூர் ஜெய் நகர் பகுதியை சேர்ந்த அகமத், ஷகிலா தம்பதியினருக்கு குழந்தையை விற்பனை செய்தனர். அவர்களிடமிருந்து முன் பணமாக ரூ.65 ஆயிரம் பெற்றனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்து விட்டனர்.
இந்த நிலையில் முருகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆசையோடு குழந்தையை பார்க்க வந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் சத்யாவிடம் குழந்தை எங்கே என்று கேட்டார். அப்போது குழந்தை காணாமல் போய்விட்டது என முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த முருகன் இதுபற்றி வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சத்யாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பெங்களூரில் குழந்தையை ரூ.1 லட்சம் பேரம் பேசி விற்று விட்டதாக சத்யா கூறினார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யா அவரது பெரியம்மா கீதா புரோக்கர் கவிதா ஆகியோரை கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ரகமத் தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.