செய்திகள்
வெள்ளையன்

முதல்வர் வெளிநாடு சென்றது தவறு- வெள்ளையன்

Published On 2019-08-31 04:13 GMT   |   Update On 2019-08-31 04:13 GMT
தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ளது மிகப்பெரிய தவறு என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்:

அரியலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சில்லறை வணிகர்களை பாதிக்கும் வகையில் ஆன்லைன் வணிகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். ஆட்சியில் யார் இருந்தாலும் வெளிநாட்டுக்காரர்களுக்கு துணையாக இருக்கிறார்கள். இதை எதிர்த்து அக்டோபர் 2-ல் போராட்டம் நடைபெறும்.

அந்நியர்களை விரட்டி அடிக்காமல் அந்நியர்களுக்கு உதவுகின்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த போராட்டம் அமையும்.

வெளிநாட்டு வங்கிகளால் உள்நாட்டு வங்கிகள் திவால் ஆகி வருகிறது. திவாலான வங்கிகளுக்கு மறு முதலீடு கொடுப்பதாக மத்திய அரசு கூறுவது தவறான செயலாகும். உள்நாட்டு தொழில்களை முடக்கி விட்டு வெளி நாட்டுக்காரர்கள் கொள்ளையடிப்பதற்கு நமது தலைவர்கள் துணை போகிறார்கள். இதை எதிர்த்து போராட மக்கள் அனைவரும் தயாராக வேண்டும்.

தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ளது மிகப்பெரிய தவறு. நமது நாட்டு தொழில் முனைவோரை முதல்வர் முதலில் ஊக்கப்படுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் எந்த அசைவாக இருந்தாலும் உள்நாட்டு சில்லறை வணிகத்தை ஒழிப்பதற்கான செயலாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News