செய்திகள்
பாலியல் தொல்லை

‘முதியவர்களாலேயே பாலியல் தொல்லை அதிகம்’ - மனக்குமுறலை வெளிப்படுத்திய மாணவிகள்

Published On 2019-08-29 04:01 GMT   |   Update On 2019-08-29 04:01 GMT
பள்ளிகளில் நடந்த போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட ரகசிய புகார் பெட்டியில், முதியவர்களால் பாலியல் தொல்லை அதிகம் நடக்கிறது, என எழுதி மாணவிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ராமநாதபுரம் சட்டக்கல்லூரி மாணவிகள் 75 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

இவர்கள் மூலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 14 மகளிர் பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும், பாதிப்பு ஏற்பட்டால் தைரியமாக வெளியில் சொல்லும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முடிவில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்க ரகசிய புகார் பெட்டி வைக்கப்பட்டது. புகார் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டதால் மாணவிகள் முதலில் தயங்கினாலும் பின்னர் தங்களுக்கு உடல் அளவில், மனதளவில் ஏற்பட்ட மனக்குமுறலை எழுதி ரகசிய புகார் பெட்டியில் போட்டனர்.



பெட்டியில் உள்ள புகார்கள் ஆராய்ந்து பார்க்கப்பட்டது. அதில், பல மாணவிகள் சிறு வயது முதல் தற்போது வரை பாலியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளை கூறியிருந்தனர். மேலும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மூலமாக மட்டுமல்லாது, முதியவர்கள் மூலமாகத்தான் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியதாக தெரிவித்து மனக்குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் கூறியதாவது:-

ரகசிய பெட்டியில் மாணவிகள் அளித்த தகவல்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும். வெளிப்படையாக யாரும் விசாரிக்கப்பட மாட்டார்கள். இதில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு இனி இதுபோன்று செயல்படாமல் தடுக்கப்படுவதுடன், அவர்களை தனியாக அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு எச்சரிக்கப்படுவார்கள்.

மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News