செய்திகள்
அத்தி வரதர் இன்று மஞ்சள்-பச்சை நிற பட்டாடையில் காட்சி அளித்தார்.

அத்தி வரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத கூட்டம்

Published On 2019-08-12 07:47 GMT   |   Update On 2019-08-12 07:47 GMT
தொடர் விடுமுறை என்பதால் அத்தி வரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் தரிசனவிழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடபெற்று வருகிறது.

தினந்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடுகிறது.

இதுவரை அத்தி வரதரை சுமார் 85 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபட்டு உள்ளனர். அத்தி வரதர் விழா வருகிற 16-ந் தேதியுடன் நிறைவுபெற உள்ளது.

இன்னும் 4 நாட்கள் மட்டுமே அத்திவரதரை வழிபட முடியும் என்பதால் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

தற்போது தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. நேற்று ஏகாதசி மற்றும் விடுமுறை நாள் என்பதால் சுமார் 4½ லட்சம் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்காக திரண்டனர்.

இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து அவர்கள் வழிபட்டு சென்றனர். இதேபோல் இன்றும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. பெரியார் நகர், செட்டித்தெரு, டி.கே. நம்பித்தெரு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்ட நெரிசலை தடுக்க பல இடங்களில் பக்தர்களை நிறுத்தி போலீசார் அனுப்பி வருகிறார்கள். தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இன்று அதிகாலை முதல் காஞ்சிபுரம் நோக்கி ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

வாலாஜாபாத் ரவுண்டானாவில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. போலீசார் வாகன போக்குவரத்தை சரிசெய்து வருகிறார்கள்.

விழாவின் 43-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள்-பச்சை நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பொது தரிசன வழியைப் போல் வி.ஐ.பி.க்கள் பாதையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வி.ஐ.பி. வரிசையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள்.

இன்றும் பக்தர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
Tags:    

Similar News