செய்திகள்
விபத்துக்குள்ளான கார்கள் நொறுங்கி கிடக்கும் காட்சி.

புதுக்கோட்டை அருகே கார்கள் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு

Published On 2019-08-08 10:08 IST   |   Update On 2019-08-08 10:08:00 IST
புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள உடையாண்டிப்பட்டியை சேர்ந்த ரெங்கராஜ் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார்.

புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் செல்லும் போது , காரின் முன்புற வலது பக்க டயர் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய கார், நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

அப்போது திருச்சி மற்றும் புதுக்கோட்டையை நோக்கி சென்ற 6 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்த கார் மீது மோதி கவிழ்ந்தன. இந்த விபத்தில் கார்களின் கண்ணாடிகள், கதவுகள், மேற்கூரை உள்ளிட்ட பல பாகங்கள் சிதைந்தது.

இதனால் காரில் இருந்த நபர்கள் காயமடைந்து அலறினர். இந்த விபத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே கீரனூர் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருப்பினும் இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் துடையூரை சேர்ந்த சிதம்பரம் (50), கார் டிரைவர் உடையான்பட்டியை சேர்ந்த ரெங்க ராஜ் (32), திருமயம் அருகே வேகுப்பட்டியை சேர்ந்த ராமநாதன் மனைவி நாகரத்தினம் (78), காரைக்குடியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நாகலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த 18 பேரும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று காலை காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற விபத்துக்கள் இதுவரை நடந்ததில்லை. விபத்து நடந்த சாலை நேரான சாலையாகும். அப்படியிருந்தும் 7 கார்கள் மோதி விபத்தில் சிக்கியுள்ளன. இது தொடர்பாக போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News