செய்திகள்
விழாவின் 33-வது நாளான இன்று அத்திவரதர் பச்சை, காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அத்திவரதரை தரிசிக்க இன்று காலை 1 லட்சம் பேர் திரண்டனர்

Published On 2019-08-02 07:46 GMT   |   Update On 2019-08-02 07:46 GMT
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதரை தரிசிக்க இன்று காலை சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் குவிந்தனர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 31 நாட்கள் சயன கோலத்தில் (படுத்த நிலையில்) இருந்த அத்திவரதர் நேற்று முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

தினந்தோறும் சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இதுவரை 48 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை வழிபட்டு உள்ளனர்.

நேற்று அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் முதல் நாள் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்ததை விட கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கத்துக்கு மாறாக சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் அத்தி வரதரை வழிபட குவிந்தனர். இதனால் கோவில் முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து பக்தர்களை அனுப்பி வருகிறார்கள்.

நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினங்களில் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க இன்றே அத்திவரதரை வழிபட வந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.

இன்று பிற்பகலுக்கு பின்னர் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

இதைத் தொடர்ந்து கோவிலில் பாதுகாப்பு பணி மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முதல் சுமார் 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் அவர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

விழாவின் 33-வது நாளான இன்று அத்திவரதர் பச்சை, காவி நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். செண்பகப்பூ மாலையில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News