செய்திகள்
தாறுமாறாக ஓடிய கார் (கோப்புப்படம்)

ஈரோட்டில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய காரால் பொதுமக்கள் ஓட்டம்

Published On 2019-07-31 05:12 GMT   |   Update On 2019-07-31 05:12 GMT
ஈரோடு புதிய மேம்பாலத்தில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய காரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஈரோடு:

ஈரோடு புதிய மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கால் டாக்சி ஒன்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது.

மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி ஈ.வி.என். ரோட்டில் வேகமாக சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டாக்சி தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

இதில் அந்த பகுதியில் தனியார் மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு வேகமாக சென்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அந்த கால் டாக்சியை சினிமா பாணியில் விரட்டி சென்றனர். சென்னிமலை ரோடு ரெயில்வே கேட் அருகே வந்த போது அந்த கால்டாக்சியை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த கால் டாக்சியை அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த ரங்கம் பாளையத்தைச் சேர்ந்த தீபக் குமார் என்ற வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News