செய்திகள்
கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த ஜெகதீஷ்.

சத்தியமங்கலத்தில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை

Published On 2019-07-31 09:39 IST   |   Update On 2019-07-31 09:46:00 IST
சத்தியமங்கலத்தில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த மேட்டூரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 30). திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு அவர் வேலை பார்த்த கடை எதிரே சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நுகர்பொருள் வாணிப கிடங்கு அருகே நண்பர்களுடன் ஜெகதீஷ் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் ஜெகதீஷ் பிணமாக கிடந்தார். அவரது மர்ம உறுப்பை கல்லால் தாக்கிச நசுக்கி உள்ளனர். இதில் ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.

அவரை இப்படி கொடூரமாக கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று உடனடியாக தெரியவில்லை.

ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இடத்தில் கூட்டம் கூடியது. அவரது உறவினர்கள் திரண்டனர். சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர்.

அவரது உடலை எடுக்க முயன்றபோது உறவினர்கள் திரண்டு உடலை எடுக்க விடாமல் தடுத்தனர். கொலையாளியை கண்டுபிடித்து அவர்களை கைது செய்த பிறகே உடலை எடுக்க வேண்டும் என கூறினர். மேலும் சத்தி-கோலை மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். கொலையாளியை விசாரணை செய்து விரைவில் பிடித்து கைது செய்வோம் என்று கூறினர்.

இதையொட்டி அவர்கள் கலைந்து சென்றாலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலமும் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

Similar News