செய்திகள்
கலெக்டர் பொன்னையா

வதந்தி பரப்பினால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2019-07-29 12:34 IST   |   Update On 2019-07-29 14:39:00 IST
அத்திவரதர் விழா குறித்து வதந்திகளைப் பரப்புவோர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் பொன்னையா எச்சரித்துள்ளார்.
அத்திவரதரை தரிசிக்க நேற்று ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் குவிந்ததால் காஞ்சிபுரம் நகரமே குலுங்கியது.

நேற்று காலையில் இருந்து மதியம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்ததால் போலீசார் பாதுகாப்பு கருதி பக்தர்களை திருப்பி அனுப்பினர். மறுநாள் (இன்று) தரிசனத்துக்கு வருமாறு கூறினர்.

இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

பக்தர்கள் பலரும் “வெகு தொலைவில் இருந்து வந்தும் சாமியை தரிசனம் செய்யவிடாமல் திருப்பி அனுப்புகிறீர்களே” என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஊருக்கும் செல்ல முடியாமல், தரிசனத்துக்கும் செல்ல முடியாமல் தவித்தனர். அவர்கள் வாகனங்களிலேயே இரவை கழித்து இன்று மீண்டும் தரிசனத்துக்கு வந்ததை காண முடிந்தது. பல லட்சம் பக்தர்கள் குவியும் இடத்தில் போதுமான கழிவறை வசதி செய்து தரப்படவில்லை என்று பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்களை ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி, நிறுத்தி சாமி தரிசனம் செய்ய அனுப்பி வருகிறோம். யாரையும் திரும்பி போகச் சொல்லவில்லை.

கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிர் இழந்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.

அத்திவரதர் தரிசனத்துக்காக நேற்று ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது நெரிசலில் சிக்கி பக்தர்கள் இறந்தனர் என்று வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“அத்திவரதர் விழா குறித்து வதந்திகளைப் பரப்புவோர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

போலீசார் கூட்டத்தினை ஒழுங்குப்படுத்தி வதந்திகளை நம்பாதீர்கள் என அறிவுறுத்தினர்.

கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும், போதுமான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவ முகாம்களை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து வருகிறோம்.

150 கழிப்பறைகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது 210 கழிப்பறைகள் உள்ளன. இன்னும் 2 நாட்களில் மேலும் 20 கழிப்பறைகளை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அரசு சார்பில் 2 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிலையை உன்னிப்பாக கண்காணித்து தேவையான நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். வடக்கு மாட வீதியிலும், டோல்கேட் பகுதியிலும் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கூடுதலாக 2 பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News