செய்திகள்
பணியிடை நீக்கம்

மாணவிகளிடம் சில்மி‌ஷம்- பவானி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

Published On 2019-07-28 13:34 GMT   |   Update On 2019-07-28 13:34 GMT
மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து பவானி ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது47). இவர் பவானி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகளிடம் சில்மி‌ஷம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து இரண்டு பிளஸ்-1 மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேரில் சென்று புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் புகார் கூறப்பட்ட ஆசிரியர் சக்திவேல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என வலியுறுத்தி மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் அறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் இருந்து ஆசிரியர் சக்திவேல் நைசாக வெளியேறிவிட்டார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து ஆசிரியர் சக்திவேல் மலையம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் ஆசிரியர் மீது நடவடிக்கை வலியுறுத்தி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பவானி மகளிர் போலீசார் ஆசிரியர் சக்திவேல் மீது வழக்குபதிவு செய்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு முதன்மை மாவட்ட கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார். மேலும் அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News