செய்திகள்
கைது செய்யப்பட்ட சிவநேசன்.

ரூ.4 கோடி மொய் விருந்து வசூலித்த விவசாயி வீட்டில் கொள்ளை

Published On 2019-07-27 12:08 IST   |   Update On 2019-07-27 12:08:00 IST
புதுக்கோட்டை அருகே ரூ.4 கோடி மொய் விருந்து வசூலான விவசாயி வீட்டில் வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மொய்விருந்து நடத்தப்பட்டு வருகிறது. நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், திருமணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கும், விவசாயம் மற்றும் தொழில்களுக்கும் பணத்தேவை இருப்பவர்கள் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு தனி நபரின் மொய் வசூல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வசூலானது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து நடத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் மட்டும் இந்த விருந்து நடத்தப்படும். அதன்படி தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்து களை கட்டியுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகாட்டை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி பிரமாண்டமான அளவில் மொய் விருந்து நடத்தினார். மொய் விருந்தில் பங்கேற்பவர்கள் வழங்கும் மொய்ப்பணத்தை எண்ணுவதற்காக தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் எந்திரங்களுடன் சேவை மையத்தை அமைத்திருந்தனர். மொய் எழுதிய இடங்களிலும், வங்கி சேவை மையத்தின் அருகிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு மைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் பங்கேற்ற 10ஆயிரம் பேருக்கு 1000 கிலோ ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

இந்த மொய் விருந்து மூலம் கிருஷ்ணமூர்த்திக்கு ரூ.4 கோடி வரை மொய் வசூலானது. ரூ.7 கோடி வரை வசூலாகும் என்று எதிர்பார்த்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு காரணமாக ரூ.4 கோடி வசூலானதாக கிருஷ்ணமூர்த்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மொய் விருந்தில் வசூலான ரூ.4 கோடி பணத்தை கிருஷ்ணமூர்த்தி அவரது வங்கி கணக்கில் செலுத்தினார்.

இந்தநிலையில் நேற்றிரவு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு அயர்ந்து தூங்கினர். இன்று அதிகாலை வீட்டில் ஏதோ சத்தம் கேட்கவே, கிருஷ்ணமூர்த்தி எழுந்து பார்வையிட்டபோது 4 மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி 4 பேரையும் பிடிக்க முயன்றார். அப்போது ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற 3 பேரும் வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து பிடிபட்ட நபருக்கு கிருஷ்ணமூர்த்தி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடகாடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வடகாடு அருகே உள்ள அன வயல் பகுதியை சேர்ந்த சிவநேசன்(29) என்பதும், கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பணம் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. சிவநேசன் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக ஒரு ஏஜென்சியிடம் பல லட்சம் பணம் கொடுத்துள்ளார். பலரிடம் கடன் வாங்கி அந்த பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் சிவநேசனுக்கு அந்த ஏஜென்சி நிறுவனத்தினர் வெளிநாட்டு வேலை வாங்கி கொடுக்காததுடன், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பணத்தை இழந்து தவித்த சிவநேசனிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப திரும்ப கேட்டுள்ளனர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிவநேசன் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் விவசாயி கிருஷ்ணமூர்த்திக்கு மொய் விருந்து மூலம் ரூ.4 கோடி வசூலாகியுள்ள தகவலை அறிந்த அவர், அந்த பணத்தை கிருஷ்ணமூர்த்தி எப்படியும் வீட்டில்தான் வைத்திருப்பார் என்று எண்ணி நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டினார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் பின்புற சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். சத்தம் கேட்டு கிருஷ்ணமூர்த்தி எழுந்ததால் அவரின் பிடியில் சிவநேசன் சிக்கியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய அவரது நண்பர்கள் யாரென்றும் விசாரணை நடத்தி வலைவீசி தேடிவருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் மொய் விருந்தில் பணம் மற்றும் உணவு பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மொய் விருந்து நடைபெறும் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ரூ.4 கோடி மொய் விருந்து வசூலான விவசாயி வீட்டில் வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar News