செய்திகள்
அத்தி வரதர் வைபவத்தின் 24ம் நாளாகிய இன்று எம்பெருமான் மாம்பழநிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

அத்திவரதர் 22 நாள் தரிசனத்தில் ரூ.1.28 கோடி உண்டியல் வசூல்

Published On 2019-07-24 11:55 IST   |   Update On 2019-07-24 11:55:00 IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் காணிக்கையாக கடந்த 22 நாட்களில் மொத்தம் ரூ. 1.28 கோடி வரை உண்டியல் வசூலாகி உள்ளது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

சாதாரண நாட்களில் சுமார் 1½ லட்சம் பேரும், விடுமுறை நாட்களில் 2½ லட்சம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பக்தர்கள் பலியானார்கள். இதையடுத்து கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோவிலில் கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 750 சக்கர நாற்காலிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது மேலும் 500 சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

கோவில் வளாகத்தில் 2600 மீட்டர் நீளத்துக்கு பக்தர்கள் வசதிக்காக தற்காலிக நிழற் பந்தலும், சுமார் 8 ஆயிரம் பேர் இளைப்பாறிச் செல்லும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த 22 நாளில் இதுவரை சுமார் 30½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கிறார்கள். அத்திவரதர் விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 10 உண்டியல்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன.

அவற்றை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் தலைமையில் திறந்து கோவில் ஊழியர்கள் எண்ணினர்.

இதுபற்றி இணை ஆணையர் செந்தில்வேலன் கூறும் போது, ‘22 நாட்களாக கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களில் இருந்து மொத்தம் ரூ. 1.28 கோடி வரை வசூலாகி உள்ளது.

மேலும் 42 கிராம தங்கம், 457 கிராம் வெள்ளியும் கிடைத்தன. தொடர்ந்து உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, பணம் எண்ணப்பட்டு வருகிறது’ என்றார்.

இதற்கிடையே நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்தி வரதரை தரிசனம் செய்தார். அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘அத்திவரதர் ஜூலை 1-ந் தேதி முதல் சயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்’ என்றார்.

அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் போது பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்துக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

48 நாட்கள் நடைபெறும் விழாவில் அத்திவரதர் சிலை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், மீதம் உள்ள 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி நாளை (25-ந் தேதி) நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல்-அமைச்சரின் அறிவிப்பையடுத்து வருகிற 1-ந் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்க உள்ளார். அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நாட்கள் ஒருவாரம் குறைந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

விழாவின் 24-ம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் அருள் பாலித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்த படி உள்ளது.

Similar News