செய்திகள்
அத்திவரதர்

அத்திவரதர் இடத்தை மாற்றுவது சாத்தியமல்ல - கோவில் அர்ச்சகர் கருத்து

Published On 2019-07-22 06:24 GMT   |   Update On 2019-07-22 06:24 GMT
ஆகமவிதிகளின்படி அத்திவரதரை வேறு இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லை என்று திருக்கோயிலின் மூத்த பட்டர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

தினந்தோறும் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

கடந்த வாரம் பக்தர்கள் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகமானதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 5 பக்தர்கள் பலியானார்கள்.

இதனால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அத்திவரதர் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது அத்திவரதர் தரிசன இடத்தை மாற்றலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆய்வு செய்தனர்.

பின்னர் தலைமைச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறும்போது, "அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு பணியில் கூடுதல் தன்னார்வலர்கள், முதியோர் ஓய்வு எடுக்க நாற்காலி இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.



இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அத்தி வரதர் தரிசன இடம் மாற்றம் குறித்து அர்ச்சகர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து அத்திவரதர் தரிசன இடத்தை மாற்றலாமா? என்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கோவில் அர்ச்சகர்களிடமும் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திருக்கோயிலின் மூத்த பட்டர் ஒருவர் மாலைமலர் நிருபரிடம் தெரிவித்ததாவது:-

அத்தி வரதர் விழா 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஆகமவிதிகளின்படி அத்தி வரதரை வேறு இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லை.

மேலும் தற்போது அத்தி வரதர் திருமேனி சிறிது பின்னப்பட்டுள்ளது (சேதம்).

எதிர்காலத்தில் நமது சந்ததியினரும் எம்பெருமானை வழிபட வேண்டும் என்பதால் எம்பெருமான் திருமேனியினை 48 நாட்கள் கழித்து பத்திரமாக திருக்குளத்தில் வைக்க வேண்டும். எனவே திருமேனியினை அடிக்கடி எடுத்து கையாள வாய்ப்பில்லை.

மேலும் எம்பெருமானை நின்றகோலத்தில் வைக்க 2 நாட்கள் ஆகும். அப்போது பக்தர்களும் தரிசனம் செய்ய முடியாது. மேலும் திருமேனி பின்னப்பட்டுள்ளதால் 24 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்க சாத்தியமில்லை. எனவே கடைசி 10 நாட்கள் மட்டுமே எம்பெருமானை நின்ற கோலத்தில் வைக்க யோசனை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே கருத்தை கோவில் அர்ச்சகர்கள் பலரும் கூறினார்கள்.

விழாவின் 22-வது நாளான இன்று அத்தி வரதர் இளம் பச்சை நிற பட்டாடையில் அருள்பாலித்தார்.

காஞ்சிபுரத்தில் இன்று காலை சாரல் மழை பெய்தது. கொட்டும் மழையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வழக்கம் போல் பக்தர்கள் வருகை இன்றும் அதிகமாக காணப்பட்டது.

கூடுதல் போலீசாரும், தன்னார்வலர்களும் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பினர். இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த என்.சி.சி. மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வரிசையில் நிற்கும் முதியோர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. இதனை பக்தர்கள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.
Tags:    

Similar News