செய்திகள்
ரவுடி வரிச்சியூர் செல்வம்

அத்திவரதரை தரிசிக்க ரவுடிக்கு போலி பாஸ்: அதிமுக பிரமுகர் - போலீசிடம் விசாரணை

Published On 2019-07-18 09:31 GMT   |   Update On 2019-07-18 09:31 GMT
அத்திவரதரை தரிசிக்க ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வி.ஐ.பி. பாஸ் கொடுத்தது அதிமுக பிரமுகர், போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஆரம்பத்தில் 3 மணி நேரம் காத்திருந்தவர்கள் தற்போது சுமார் 6 மணி நேரம் வரை வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

சாதாரண பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வமும் அவரது நண்பர்களும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக சென்று அத்திவரதரை தரிசித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வரிச்சியூர் செல்வத்தை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலை அருகே அமர வைத்து சிறப்பு மரியாதை அளித்து உள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து வரிச்சியூர் செல்வம் கோவிலுக்கு வந்தது முதல் அவரை உபசரித்து அழைத்து சென்றவர்கள் யார்? யார்? என்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து சேகரித்து வருகிறார்கள்.

ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தது எப்படி? அது போலியானதா? அதனை வழங்கியவர்கள் யார்? என்றும் விசாரணை நடக்கிறது. ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வி.ஐ.பி. பாஸ் கொடுத்தது அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வரிச்சியூர் செல்வம் வி.ஐ.பி. பாசை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியிடம் இருந்து பெற்று உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள்தான் வரிச்சியூர் செல்வத்தையும் அவரது நண்பர்களையும் கோவிலுக்குள் சகல மரியாதையுடன் செல்ல உதவி உள்ளனர்.

இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலி வி.ஐ.பி. பாசை கூடுதல் விலை கொடுத்து வாங்கி தரிசனத்துக்கு வந்த 9 பேர் இதுவரை சிக்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த போலி வி.ஐ.பி. பாசை தயார் செய்து விற்கும் கும்பல் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விழாவில் 18-வது நாளான இன்று அத்திவரதர் நீலநிற வண்ண பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடிகர் பாண்டியராஜன் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.

வழக்கத்துக்கு மாறாக இன்று அதிகாலை முதலே கூடுதலாக பக்தர்கள் குவிந்தனர். வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்ததால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்பட்டன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News