செய்திகள்
பிடிபட்ட கொள்ளையன் சந்திரகுமார்

ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபர் - கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

Published On 2019-07-17 05:48 GMT   |   Update On 2019-07-17 08:16 GMT
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஏ.டி.எம் மையத்தில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் உள்ளே சென்று ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றான். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடித்து வைத்த அந்த வாலிபரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.



விசாரணையில் அந்த வாலிபர் கர்நாடக மாநிலம் குசால் நகர் கூட மங்களூர் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 29) என தெரியவந்தது. சந்திரகுமார் பிழைப்புக்காக ஈரோடு வந்ததும் செலவுக்கு பணம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரகுமாரை கைது செய்தனர். பின்னர் அவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு அடுத்த சித்தோடு நால் ரோட்டில் உள்ள ஏடிஎம் மையத்தில் உள்ள எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News