செய்திகள்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

வேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்

Published On 2019-07-16 08:36 GMT   |   Update On 2019-07-16 08:36 GMT
வேலூர் தொகுதி தேர்தல் சிறப்பு பயிற்சி வகுப்பில் பங்கேற்காத ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குச் சாவடியில் பணிபுரிவதற்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் மொத்தம் 7557 ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு, தேர்தல் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு நேற்று முன்தினம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கிய செல்போன் வாயிலாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு தொடர்பாக குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பயிற்சி வகுப்பில் 1233 பேர் கலந்து கொள்ளவில்லை. இவர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் விளக்கம் கோரும் குறிப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கத்தக்க காரணமில்லாமல் பயிற்சி வகுப்பிற்கு வராதவர்களுக்கு பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தனியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் இவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 18-ந் தேதி சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்திட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

இந்த சிறப்பு வகுப்புகளிலும் கலந்து கொள்ளாதவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கட்டாய பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News