செய்திகள்
இந்திய ரூபாய்

வேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்

Published On 2019-07-16 08:13 GMT   |   Update On 2019-07-16 08:13 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை நடந்த சோதனையில் ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.44 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் வருமான வரித்துறையினர் தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் வசூரில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சத்து 74 ஆயிரம் சிக்கியது. பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலைகண்காணிப்பு குழுக்கள் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.44 லட்சத்து 32 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாணியம்பாடியில் ரூ.89,41,800 மதிப்புள்ள தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்ல வேண்டாம். என்று பொதுமக்களும், வியாபார நிறுவனங்களும், வியாபாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தேர்தலுக்காக பணம், பொருள் கொடுப்பது தொடர்பான புகார்களை 1800-425-3692 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News