செய்திகள்
போராட்டம்

உயர்மின் கோபுரத்துக்கு எதிர்ப்பு- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2019-07-16 05:37 GMT   |   Update On 2019-07-16 05:37 GMT
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:

தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் உட்பட 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கு 13 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலும் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது :-

1885 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு என்று புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். உயர்மின் கோபுரம் அமைக்கும் போது விவசாய நிலத்தில் அமைக்காமல் சாலையோரமாக கேபிள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களுக்கு முறையான இழப்பீடு மற்றும் வாடகை வழங்க வேண்டும். விவசாயிகள் அனுமதியின்றி காவல்துறை உதவியுடன் விவசாயிகளை மிரட்டி அத்துமீறி செய்யும் வேலையை நிறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் விவசாயிகள் திரளாக பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News