செய்திகள்

தடைக்காலம் முடிந்தது- நாகை-தஞ்சை மீனவர்கள் இன்று மீன்பிடிக்க சென்றனர்

Published On 2019-06-15 05:35 GMT   |   Update On 2019-06-15 05:35 GMT
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவுடன் தடைக்காலம் முடிவடைந்ததால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நாகப்பட்டினம்:

தடைக்காலத்தில் கடந்த 2 மாதங்களாக களையிழந்து காணப்பட்ட நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். மீன்பிடி துறைமுகம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்வதால் நிறைய மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த சேதுபாவாசத்திரத்தில் இருந்து 42 படகுகள், கள்ளிவயல் தோட்டம் 15 படகுகள், மல்லிபட்டினம் துறைமுகத்திலிருந்து 4 படகுகள் என மொத்தம் 61 படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி அதிகாலை அதிபயங்கரமாக வீசிய கஜா புயலால் விசைப்படகுகள் அனைத்தும் சேதமடைந்ததால் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் முழுவதும் சேதமடைந்த படங்களுக்கு ரூ.5 லட்சமும் அறிவித்தது.

இதில் பகுதி சேதமடைந்த படகுகள் நிவாரணம் பெற்றுக்கொண்டு சீரமைத்தனர். முழுவதும் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் போதாது என விசைப்படகு மீனவர்கள் போராடி வந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னரே நிவாரணத்தொகை கிடைத்தது. அதனால் மற்றவர்கள் படகுகள் தயார் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

அதிராம்பட்டினம் மீனவர்கள் இன்று காலையில் தங்களது படகுகளில் ஐஸ்கட்டி மற்றும் உப்பு, டீசல், மீன்பிடி வலைகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை தயார்படுத்தி படகுகளில் ஏற்றினர். பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி பூஜை போட்டனர். இதனையடுத்து மீன்பிடி தொழிலை நம்பி இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலையில் கடலுக்குச் சென்றனர். கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்துக் கொண்டு நாளை காலை (16-ம் தேதி) கரை திரும்புவார்கள். 

Tags:    

Similar News